×

ஜாதகர் பிறப்பின் நோக்கம் என்ன?

இவ்வுலகில், பிறந்த ஒவ்வொரு ஆத்மாவும் ஒரு குறிபிட்ட விஷயத்திற்காகவே பிறப்பெடுக்கிறது. அது என்னவென்று நமக்கு தெரியாமல், காலத்தோடு கடந்து கொண்டு இருக்கிறோம். இப்படி ஒவ்வொரு ஆத்மாவும் எந்த இலக்கை ேநாக்கி பயணிக்கும் அல்லது பயணிக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்கு, ஜோதிடத்தின் வழியே நமக்கு வழிகாட்டும். லக்னாதிபதி என்பது ஜாதகரைத்தான் குறிக்கிறது. அப்படி லக்னாதிபதி அமர்ந்த இடத்தை வைத்து, ஜாதகர் அனுபவிப்பது என்னவென்று அறிந்து கொள்ளலாம். லக்னாதிபதியே ஜாதகரின் தன்மையை சொல்கிறது, வழிமொழிகிறது. லக்னமே உயிர் என்று அந்த வீட்டின் அதிபதியே ஜாதகர் என்றும் கொள்ளலாம். ஜாதகருக்கு லக்னாதிபதி லக்னத்திலேயே (1ல்) அமர்ந்தால் தன்னுடைய சுயதேவைகளுக்காகவே வாழும் இயல்பும் கொண்டவராக இருப்பார்.

மேலும், தன்னுடைய கௌரவத்தை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்க விரும்பமாட்டார். லக்னாதிபதி எந்த கிரகம் என்பதைப் பொறுத்து மற்ற விஷயங்கள் ஜாதகரை மேம்படுத்தும் அமைப்பாக இருக்கும்.  லக்னாதிபதி இரண்டாம் பாவத்தில் (2ல்) அமர்ந்தால், ஜாதகர் குடும்பத்திற்காகவும் தன்னுடைய பணத்தேவைகளுக்காகவும் ஜாதகர் தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருப்பார். அந்த பயணத்தின் மாற்றங்களும் தேவைகளும் இரண்டாம் இடத்தை பார்க்கும் கிரகங்களைப் பொறுத்தும் இரண்டாம் பாவத்தில் அமர்ந்த கிரகத்தின் அடிப்படையிலும் மாற்றங்கள் உண்டாகும்.

லக்னாதிபதி மூன்றாம் பாவத்தில் (3ல்) அமர்ந்தால், ஜாதகர் சகோதர / சகோதரிகளுக்காகவும், உபஜெய ஸ்தானமாக இருப்பதால் வெற்றியை நோக்கிப் பயணிப்பதற்காகவும், ஜாதகர் பயணத்தை தொடர்ந்து கொண்டே இருப்பார். மூன்றில் அமர்ந்த லக்னாதிபதி எப்படி வலிமை அடைகிறார் என்பதை பொருத்தும் ஜாதகரின் வாழ்க்கைப்பயணம் மாறுபடும்.

லக்னாதிபதி நான்காம் பாவத்தில் (4ல்) அமர்ந்தால், ஜாதகர் தன் தாயிற்காகவும், சுகத்திற்காகவும், கல்விக்காகவும் தன் பயணத்தை மேற்கொண்டிருப்பார். இதில், நான்காம் பாவத்தில் அமர்ந்த லக்னாதிபதியின் வலிமையை பொறுத்து பலன்கள் மாறுபட்டதாக இருக்கிறது.

லக்னாதிபதி ஐந்தாம் பாவத்தில் (5ல்) அமர்ந்தால், ஜாதகர் தன் குழந்தைகளுக்காகவும் அவர்களின் நலனுக்காகவும் பயணத்தை மேற்கொள்வார். இதில் லக்னாதிபதி ஐந்தில் அமரும் போது ஏற்படும் வலிமையை பொறுத்தே பலன்கள் மாறுபடும்.

லக்னாதிபதி ஆறாம் பாவத்தில் (6ல்) அமர்ந்தால், நோய் மற்றும் தான் வாங்கிய கடனிற்காகவும் தன் வாழ்வின் பயணத்தை மேற்கொள்வார். இதில், ஆறாம் பாவத்தை தொடர்பு கொள்ளும் கிரகம் மற்றும் மற்ற கிரகங்களின் வலுவைப் பொறுத்து பயணங்கள் மாறுபடும்.

லக்னாதிபதி ஏழாம் பாவத்தில் (7ல்) அமர்நதால், தன் மனைவிக்காகவும் சமூகம் மற்றும் பொது சமூக சேவைகளுக்காகவும் தன் பயணத்தை மேற்கொள்வார். ஏழாம் பாவத்தில் அமர்ந்த லக்னாதிபதியின் வலிமையை பொறுத்து ஜாதகரின் பயணங்கள் மாறுபடும்.

லக்னாதிபதி எட்டாம் பாவத்தில் (8ல்) அமர்ந்தால், வாழ்வில் பெரும் தனம் பெறுதற்கும் ஏமாற்றங்கள் மற்றும் அவமானங்களுடன் வாழ்வை பயணித்துக் கொள்ளக் கூடிய சூழ்நிலை ஏற்படும். இதில் லக்னாதிபதியின் வலிமை மற்றும் லக்னாதிபதியை பார்வை செய்யும் சுபகிரகங்களைப் பொறுத்து வாழ்வின் பயணங்கள் மாறுபடும்.

லக்னாதிபதி ஒன்பதாம் (9ம்) பாவத்தில் அமர்ந்தால், ஜாதகர் ஆன்மிக ஈடுபாட்டில் அதிகம் பயணிப்பார். தனக்கு எளிமையாக கிடைக்கக்கூடிய விஷயங்களில் வாழ்வின் பயணங்கள் ஜாதகருக்கு அமையும். இதில் லக்னாதிபதியின் சுபத்தன்மையை பொறுத்து அவரின் வாழ்வின் பயணங்கள் இருக்கும். சுபகிரகங்கள் ஒன்பதாம் பாவத்தை பார்வை செய்தால், சுபதன்மையுடன் ஜாதகர் பயணிப்பார்.

லக்னாதிபதி பத்தாம் பாவத்தில் அமர்ந்தால், (10ம்) ஜாதகர் தனது தொழிலுக்காகவே வாழ்வின் பல விஷயங்களை அர்ப்பணிக்கும் இயல்புடையவராக இருப்பார். லக்னாதிபதியின் வலிமையை பொறுத்து அவரின் தொழிலின் மேம்பாடுகளும் வாழ்வும் அமையும்.

லக்னாதிபதி பதினொராம் பாவத்தில் அமர்ந்தால், (11ம்) ஜாதகர் தனது அபிலாஷைகளுக்காகவும் வெற்றிக்காகவும் தன் பயணத்தை மேற்கொள்வார். இதில் லக்னாதிபதியின் வலிமை மற்றும் மற்ற கிரகங்களின் பார்வை / இணைவை பொறுத்து பயணங்கள் அமையும்.

லக்னாதிபதி பனிரெண்டாம் பாவத்தில் அமர்ந்தால் (12ம்) ஜாதகர், அதிக செலவுகளை செய்பவராகவும் அல்லது அதிக கருமியாகவும், முக்திக்காகவும் அதிக பயணத்தை மேற்கொள்பவராகவும் இருப்பார். லக்னாதிபதியின் வலிமையை பொறுத்தும் பார்வைகளை பொறுத்தும் வாழ்வின் பயணங்கள் அமையும்.

தொகுப்பு: சிவகணேசன்

The post ஜாதகர் பிறப்பின் நோக்கம் என்ன? appeared first on Dinakaran.

Tags : Jataka ,Dinakaran ,
× RELATED திருமணத் தடைகளுக்கு ஜாதக தோஷங்கள் காரணமா? :ஜோதிட ரகசியங்கள்